Thepperumanallur Pracheena Sampradaya Natya Nadaga Mandram

தேப்பெருமாநல்லூர் ப்ராசீன ஸம்ப்ரதாய நாட்டிய நாடக மன்றம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள தேப்பெருமாநல்லூர் கிராமத்தின் வரலாறு, பெருமாள் ஸன்னிதி, பாகவத மேளா நாட்டிய நாடகம் மற்றும் அன்னதான சிவன் பற்றிய குறிப்புகள்.

தேப்பெருமாநல்லூர் — ஊர் வரலாறு

தமிழகத்தைச் சேர்ந்த, தேப்பெருமாநல்லூர், தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு அமைதியான கிராமம் ஆகும். இது கும்பகோணத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தெற்கில் திருநாகேஸ்வரமும் வடக்கில் அம்மாசத்திரமும் ( திருபுவனம்) எல்லையாக அமைந்துள்ளது. ஒப்பில்லா உப்பிலியப்பன் கோவில்,ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் கிரிகஜாம்பாள் ஸமேத நாகேஸ்வரன் கோவில், பெருவுடையார் மகாலிங்க சுவாமி திருக்கோவில் திருவிடைமருதூர், திருபுவனம் சரபேஸ்வரர் கோவில் போன்ற பல புனிதமான வழிபாட்டுத் தலங்களுக்கு மத்தியில் அமையப்பெற்றது தேப்பெருமாநல்லூர் கிராமம். மேலும், புராதனமான கோவிந்தபுரம் போதேந்திர சுவாமிகள் மடம் , திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடம், மருதாநல்லூர் ஶ்ரீ சத்குரு சுவாமிகள் மடம் போன்ற புண்ணிய ஸ்தலங்களால் சூழப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் வெளியான திருநாகேஸ்வரம் நூல் (ஆசிரியர் நா.ரெங்கசாமி) மூன்றாம் ராஜராஜசோழனின் 19வது ஆட்சியாண்டில் அதாவது கி.பி.1234இல் இந்தப் புதிய கிராமம் / ஊர் நிர்மாணிக்கப்பட்டது எனக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அப்போது இந்த கிராமத்துக்கு இட்டப்பெயர் “தூய பெருமாள் நல்லூர்” என்பதாகும்.      தேவ ராஜபுரம்  என்றும்.லக்ஷ்மி நாராயணபுரம் என்றும் பெயர்களையுடைய இந்த ஊர் பின் பின்னாளில் மருவி  பல அடைந்து “தேப்பெருமாள்நல்லூர்” என மாறிற்று, என ஆதாரத்துடன் விளக்குகிறது. காஞ்சிப்பெரியவரால் பெரிதும் புகழப்பட்ட மஹான் “அன்னதானசிவன்” இவ்வூரில்தான் அவதாரம் செய்தார். இன்றும் அம்மஹானுடைய உறவினர்கள் இவ்வூர் அக்ரஹாரத்தில் வசித்து வருகின்றனர். பாம்பு அர்ச்சனை செய்த பிரபலமான “ஸ்ரீவேதாந்தநாயகி ஸமேத காஸிவிஸ்வநாதர்” சன்னதி என்னும் சிவன் கோயில் இவ்வூர் அக்ரஹார‌த்தின் கிழக்கே உள்ளது. புகழ் வாய்ந்த சுந்தர காளியம்மன் கோவில் ஊர் எல்லையிலேயே மக்களை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது

பெருமாள் ஸன்னிதி

“அக்ரம்” என்னும் சொல்லுக்கு “நுனி” என்று பொருள். தெருவின் இரு நுனிகளிலும் ஹரி,ஹரன் இருவருக்கும் ஸன்னிதிகள் இருப்பதால் அக்ரஹாரம். பொதுவாக அக்ரஹாரத்தின் மேற்கே ஹரியான ஸ்ரீ விஷ்ணுவின் ஸன்னிதியும், கிழக்குப்புறத்தின் வெளியே ஹரனாகிய சிவன் ஸன்னிதியும் இருக்கும். ஒருகாலத்தில் இவ்வூருக்கு லக்ஷ்மிநாராயணபுரம் என்றும்,  தேவராஜபுரம் என்றும் பெயர்கள் இருந்தது.  இவ்வூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீலக்ஷ்மிநாராயணரின் பெயரிலேயே இவ்வூர் பெயர் வழங்கப்பட்டு வந்ததும், தேவர்களின் தலைவன் விஷ்ணு என்பதால் தேவராஜன் என்ற சிறப்புப்பெயரோடு தேவராஜபுரம் என்றும் வழங்கப்பட்டு வந்தது தெரியவருகிறது. வரதராஜ பெருமாள் ஆலயம் மூன்றாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது இங்கே இரண்டு மூலவர்கள். லக்ஷ்மி நாராயணர் மற்றும் விசேஷமான வரதராஜ பெருமாள். கலியுகத்தில் நாம ஸங்கீர்த்தனமே மோக்ஷஸாதனம் என்பதால் நாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்பிய ஆதிசங்கரரின் சிஷ்யர் ஸ்ரீ பகவான் நாம போதேந்திராள் (1638-1692) தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்திலிருந்து கொண்டுவந்த ஸ்ரீ வரதராஜரை இவ்வூரில் பிரதிஷ்டை செய்தார்  . காஞ்சி வரதருக்கு 'தேப்பெருமாள்' என்னும் பெயர் உள்ளது அதன் அடிப்படையில் இவ்வூருக்கு 'தேப்பெருமாள் நல்லூர்' என்று பெயர் ஆனது. காஞ்சியிலிருந்து ஸ்ரீ வரதனை பிரதிஷ்டை செய்ததால் தக்ஷிணகாஞ்சி என்றும் காரணப் பெயர் உண்டானது.  ப்ராசீனமான இந்த ஸன்னதியில்  நரசிம்ஹர் திருமுகம் உள்ளது. இதுவே ப்ரஹ்லாத சரித்திர நாடகத்தின் பொழுது நரஸிம்ஹர் வேஷமிடும் பாகவதர் சூட்டிக்கொள்வார். இவ்வூர் பாகவதமேளா நாட்டிய நாடகத்திலும் தக்ஷிணகாஞ்சி என்னும் குறிப்பு வருகிறது. இந்த ஸன்னிதி தென்னாச்சார்ய ஸம்ப்ரதாயம், வைகானஸ ஆகமத்தைக் கொண்டது.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் மூன்று இடங்களில் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அதன் விபரங்களை பிப்ரவரி இரண்டாம் நாள் 2012ஆம் ஆண்டு கல்வெட்டு ஆய்வுத்துறை உயர் அதிகாரி ஸ்ரீ. கருப்பையா அவர்கள் ஆய்வு செய்தார். கோவிலின் பிரதான கோபுரத்தின் கீழுள்ள நிலையின் வலதுபுறத்தில் வரதன் சதா செருவை (ஒரு நொடி கூட நீங்காது எப்பொழுதும் வரதராஜன் சேவை செய்பவன் என இந்த நிலைக்காலை வைத்தவர் தன்னை அடையாள படுத்திக்கொண்டார்) என்றும், இடதுபுறத்தில் சிங்கப்பெருமாள் என்று க்ரந்த எழுத்துக்களிலும் (இந்த ஸன்னிதியில் உள்ள ஸ்ரீ நரஸிம்ஹரின் திருமுக ஏற்றதை இக்கல்வெட்டால் அறிகிறோம்),  நிலையின் மேற்புறம் இரு மீன்களின் உருவமும் மீன்களின் நடுவே பூ ஒன்றும் காணப்படுகிறன. கோபுரத்தின் கீழே வெளிப்புறம் நவீனத் தமிழில் “முத்தையன் புத்ரன் (புத்ரன்) நாகலிங்கம்." என்று கோயில் சுதை வேலைகளைச் செய்த இவ்வூரின் கீழாத்தெருவைச் சேர்ந்த நாகலிங்கம் அவர்களின் பெயர் உள்ள கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஸ்ரீநரசிம்ஹ ஜயந்தி (அன்றும்), ராதாகல்யாணம் (தைமாதம்) என இரு உத்ஸவங்களும் இந்த சன்னதியில் விஸேஷம். இடம் பெயர்ந்த மண்ணின் மைந்தர்களை தன்னை நோக்கி ஸ்ரீவரதன் உத்ஸவகாலங்களில் வரவழைக்கிறான்.

பாகவத மேளா

மெலட்டூர், சூலமங்கலம், அச்சுதமங்கலம் என்னும் சாலியமங்கலம், ஊத்துக்காடு, தேப்பெருமாள்நல்லூர், ஆகிய ஐந்து ஊர்களில் பாகவதமேளா நாட்டிய நாடகங்கள் நடைபெறுவது வழக்கம், (தற்போதைய) ஆந்திர மாநிலம் குச்சிப்புடியிலிருந்து வந்த ஸ்ரீ வேங்கடராமஸாஸ்திரி என்பவரால் உருவாக்கப்பட்ட பிராசீன ஸம்ப்ரதாய நாட்டிய நாடகங்கள் 5 கிராமங்களிலும் சுமார் 366 வருடங்களுக்கு முன் துவக்கப்பட்டது. பக்தி இயக்கத்தின் முக்கியப் பங்கு இது. இன்று ஊத்துக்காடு, சூலமங்கலம் இரு ஊர்களிலும் நாடகங்கள் நின்றுவிட்டன. பாகவதமேளா என்னும் இந்த இசை நாட்டிய நாடகங்கள் ஸம்ஸ்க்ருதம் மற்றும்  தெலுங்கு மொழிப் பாடல்களுடன் அமைந்திருக்கும், நாடகத்தில் பாத்திரத்தின் முதல் வசனம் “தரு” மற்றும் பாடல்கள் தெலுங்கிலும் பிறகு வசனம், ஸ்லோகம்  ஸம்ஸ்க்ருத்திலும் உள்ளது. 65 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீமான் நாராயணையர் என்னும் பாகவதர் தெலுங்கு தருவினைத் தொடர்ந்து வரும் ஸம்ஸ்க்ருத வசனத்தைத் தமிழ் வசனமாக  மொழிபெயர்த்து பேசவைத்தார். வைகாசி ஏகாதஸியன்று ருக்மாங்கத சரித்திரத்துடன் துவங்கி மறுதினம் துவாதஸியன்று அம்பரீஷ சரித்திரம் என வளர்ந்து உஷாபரிணயம், தேவகி கல்யாணம், க்ருஷ்ணாவதாரம், கம்ஸவதம், ஸீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம்,  நரஸிம்ஹ ஜயந்திக்கு முதல் நாளும், நரஸிம்ஹஜயந்தி அன்றும் பிரஹ்லாத சரித்திரம் நாடகமும் நடைபெறும். மராட்டியர் கால மோடி ஆவணங்களில், தேப்பெருமாள்நல்லூர்ப் பெருமக்கள் ஸ்ரீராமநவமி உற்சவத்தில் ஒன்பதாம் திருநாளில் கம்ஸவதம் நாடகம் சர்க்கார் மண்டகப்படியாக நடத்தப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பு உள்ளது. தற்போது பாகவதமேளாவில் ஸ்ரீநரஸிம்ஹஜயந்தி அன்று பிரஹ்லாத சரித்திரம் மட்டும் ஸ்ரீலக்ஷ்மிநாராயண ஸ்ரீபூமிதேவி ஸ்ரீதேவி ஸமேதா ஸ்ரீவரதராஜ ஸ்வாமி ஸன்னிதியில் இன்றும் நடைபெறுகிறது. மற்ற நாடகங்கள் கால மாற்றத்தினால் நின்றுவிட்டது. முழுக்க முழுக்க ஆடவர்களை மட்டுமே, கொண்டு நடைபெறும் பாகவதமேளா நாடகத்தின் ருக்மாங்கத சரித்திரத்திற்குக் காஞ்சி மடத்திலிருந்து மோஹினி பணம் 1950 வரை வந்து கொண்டிருந்தது. 1955களில் ருக்மாங்காத சரித்திரம் நின்றுவிட்டது. மராட்டிய மன்னன் வீரசிவாஜியை வாழ்த்திடும் ஒரு ஸ்லோகம் பிரஹ்லாத சரித்திரம் நாடகத்தில் வருவதை சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ள “ருக்மாங்கத சரித்திரம்” நூலின் முன்னுரையில் காணலாம். இதன் மூலம் மராட்டிய மன்னர்கள் ஆட்சியுடன் இவ்வூரும், கோயிலும், பாகவதமேளாவும் தொடர்புடையவை  என்பதை அறியமுடிகிறது. மராட்டிய மோடி ஆவணம் ஒன்றில் 1728 முதல் 1732 வரை ஆண்ட “முதலாம் துளஜா” எனப்படும் துக்கோஜியின் மனைவி சக்ரவாரம்பாவால், இவ்வூர்  அருகில் அம்மாச்சத்திரம் என்ற பெயரில் சத்திரம் ஒன்று 1776 அமைக்கப்பட்டு சத்திரத்திற்கு வரும் வழிப்போக்கர்களுக்கு உணவளிக்கவும், தண்ணீர் பந்தல் அமைக்கவும் தேப்பெருமாள்நல்லூர் ஸர்வமானியமாக வழங்கப்பட்டது. இந்தத் தகவல்களைத் தஞ்சாவூர் மனுவல் பக்கம் 237, மற்றும் “மராட்டியர் கால சமுதாயநிலை” நூல் (திரு கே. எம். வேங்கட்ராமையா) மூலம் உறுதியாகிறது. தஞ்சாவூரை ஆண்டு வந்த மன்னர் ஒருவர் பாகவதமேளா நாடகத்தைத் தனது அரண்மணையில் நடத்திட உத்தரவிட பாகவதர்கள் அரசனிடம் பெருமாள் ஸன்னிதியை விட்டு வேறு எங்கும் நாடகத்தை நடத்துவதில்லை என மறுக்க, அரசகட்டளை என்று வற்புறுத்தவே, அரண்மனையில் நாடகம் நடத்த ஊரின் பாகவதர்கள் அரண்மனைக்குச் சென்று நாடக உடைகளுக்காக பெட்டியை திறந்தபோது பெட்டி முழுவதும் தேள்கள் ஊர்வதைக் கண்டனர். அந்தச் செய்தியைக் கேட்டு அரசனும் அதிர்ந்து பாகவதர்களிடம் மன்னிப்புக் கேட்டான். அதுமுதல் இவ்வூர் தேள்பெருமாள்நல்லூர் என்னும் காரணப் பெயராலும் அழைக்கப்படுகிறது. அதுமுதல் இன்றுவரை இவ்வூர் பாகவதமேளா மட்டும் தேப்பெருமாள் ஸன்னிதி தவிர வேறு எங்கும் நடைபெறுவதில்லை. இயல், இசை, நாட்டியம், நாடகம் என நான்கு மணிகளின் கோர்வையாய்த் திகழும் பாகவதமேளா. தெலுங்கு, ஸம்ஸ்க்ருதம், தமிழ் என மும்மொழிகளின் சிறப்பையும் வெளிக்காட்டி தேசிய நீரோட்டத்தை வளப்படுத்துகிறது.

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி

இப்பொழுது நரசிம்ம ஜெயந்தி நாடகத்தைப் பற்றி சில குறிப்புகள். இவ்வாறாக சித்திரை ஏகாதசியன்று வசந்தமாலை நிகழ்ச்சியுடன் நமது தேப்பெருமாநல்லூர் நரசிம்ம ஜெயந்தி மகோத்சவம் துவங்குகிறது தேப்பெருமாநல்லூர் நரசிம்ம ஜெயந்தி மகோத்சவத்தின் முக்கிய நிகழ்வான ப்ரஹலாத சரித்திர நாட்டிய நாடகம் இரவு சுமார் 10 மணி அளவில் சம்பிரதாய பஜனையுடன் தொடங்கி பிள்ளையாரில் ஆரம்பித்து ஒவ்வொரு வேடமாக வந்து மறுநாள் அதிகாலையில் சுவாமி வேஷத்துடன் நிறைவுபெறும். பாகவதமேளா இசை நாட்டிய நாடகங்கள் ஸமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழியில் அமைந்திருக்கும். எங்கள் தேப்பெருமாநல்லூரில் சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீமன் நாராயண ஐயர் என்னும் பாகவதர் தெலுங்கு தருவை தொடர்ந்துவரும் சமஸ்கிருத வசனத்தை தவிர தமிழ் மொழிபெயர்ப்பையும் தமிழில் பேசுவதையும் அறிமுகம் செய்தார். பெருமாள் சன்னதியில் கர்ப்பகிரகத்தின் ஒருபுறம் நரசிம்மர் திருமுகம் அருள்பாலிக்கிறது. வருடாவருடம் நடக்கும் பிரகலாத சரித்திரம் பாகவத மேளாவில் நரசிம்மர் வேடமிடும் பாகவதர் அந்த முகத்தை அணிவார். இந்த ஒருநாள் மட்டுமே நரசிம்மரின் முகத்தை கர்ப்பக்கிரகத்தை விட்டு வெளியே காண இயலும். அதுவும் சரியாக சுவாமி அவதார சமயத்தில் கோவில் பட்டாச்சாரியார் அவர்கள் வேஷம் இடுபவருக்கு கட்டுவார்கள். வேஷம் போட்டுக் கொள்பவர்கள் அந்த அந்த கதாபாத்திரங்களாகவே மாறி விடுவார்கள் . இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாடகத்தின் முக்கிய அம்சமான நரசிம்ம அவதாரத்தின் பொழுது நரசிம்மருக்கும் இரணியனுக்குமான பலத்த மோதலுக்கு பின் ஹிரண்ய வதத்திற்கு பதிலாக இரணியன் நரசிம்மரிடம் சரணாகதி அடைவது எங்கள் ஊர் நாடகத்தின் வழக்காகும். காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும் இதில் நடத்துபவர்கள் மற்றும் நடிப்பவர்கள் பங்கு ஒருபுறமிருக்க, பாகவதர்களின் உழைப்பு சொல்லில் அடங்கா. அனைத்து பாடல்களும் உச்சஸ்தாயில் அமைந்துள்ளதாகவும் நடுநடுவே நாமாவளிகளையும் இணைத்து ஒரு நொடிப் பொழுது கூட துவள விடாமல் இரவில் இருந்து காலை வரை நிறுத்திப்பிடிப்பது இவர்களின் தனி பாங்கு. இதில் வேடம் தரிப்பவர்கள் பல்வேறு துறைகளில் வேலை செய்பவர்களாகவும் வேறு ஊர்களில் வேறு மாநிலங்களில் குடியிருப்பவர்கள் ஆக இருந்தாலும் இந்த உற்சவத்திற்காக கிராமத்திற்கு வருகை தந்து தமது பங்கை அளிப்பர். இவர்களுக்கு வழிகாட்டும் எங்கள் ஊர் பெரியவர்கள் ஒரு காலத்தில் இந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களே. அவ்வாறாக வழிவழியாக தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொண்டிருக்கும் கலாச்சாரம் மிக்க ஊர் எங்கள் ஊர் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறோம். கணத்தில் முடிவெடுத்து பக்தனான குழந்தை பிரகலாதனுக்காக ஷணத்தில் அவதரித்தவர் நரசிம்மர். இந்த அவதாரம் சில நாழிகைகளே நீடித்தாலும் தசாவதாரங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. தேப்பெருமாநல்லூர் நரசிம்ம ஸ்வாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு இணங்க கேட்டதை கொடுப்பவர் . அனைவரும் வருக நரசிம்மர் அருள் பெறுக

அட்சய பாத்திரமாகிய அன்னதானசிவன்

சின்னஞ் சிறுவயதில் செயலதுவோ பெரியதுவாம் செவியில் ஒலித்ததுமே சிலுசிலுத்துப் போகுதடா அன்னதான சிவம் அறமேற் கொண்டதுவோ அதுவல்லோ தேப்பெருமாள் நல்லூரின் அழியாப்புகழ் தமிழ் இலக்கியம் பதிவுசெய்துள்ள உதியஞ் சேரலாதன் எப்படி மஹாபாரத போரில் கௌரவப், பாண்டவப்  படைகளுக்கு உணவு படைத்தானோ அப்படி யார் எவர் என ஜாதி, மொழி, இனம், ஊர், ஏதும் பாராது கோயில்களுக்கு விழாக்காலங்களில் இறையருள் பெற வரும் மக்களுக்கு இல்லையெனச் சொல்லாது அன்னதானம் செய்து அதற்கென்றே தனது உடல் பொருள் ஆவியைத் தந்தவர் அன்னதான சிவன். 1852 - ல் அசுவத நாராயண ஸாஸ்திரியார், லக்ஷ்மி அம்மாள் தம்பதிக்குப் பிறந்த இராமசாமி என்னும் சிவனுக்கு அன்னம்மாள் என்னும் சகோதரி மற்றும் சுப்ரமணிய ஸாஸ்திரி என்னும் ஸஹோதரர் உண்டு. தேப்பெருமாள் நல்லூர் சிவன் கோவிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தியிடம் இவர் குழந்தைப் பருவம் முதல் கொண்ட பக்தி வியப்புக்குரியது. உள்ளூர் ஆரம்ப பாடசாலைக்குச் சரிவர செல்லாமல் சிலேட்டில் பூக்களைக் கொண்டு சென்று தக்ஷிணாமூர்த்திக்கு ஸமர்பிப்பார். உள்ளூர் காளியாட்டத்திருவிழாவின் போது தண்ணீர் பந்தல் அமைக்க படிக்கும் காலத்தில் துவங்கிய சிவனின் தயை... பின்னாளில் அவரை  அன்னதான சிவனாக்கியது. வேத அத்யயனம் செய்து வந்தாலும் பின்னர் வைதிகத்துக்கு வரவில்லை. திருவிடைமருதூர் செட்டியார் ஸத்திரத்தில் தங்கும் யாத்ரீகர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் தலைமை சமையல்காரர் வேலை.. மாத சம்பளம் மூன்று ரூபாய் உணவு வசதி உண்டு. உணவு தயாரித்தவுடன் சிறிது கிண்ணத்தில் சாதத்தை எடுத்து வைப்பார் எல்லோருக்கும் உணவு வழங்கியபின் மீண்டும் குளிப்பார் கால் நடையாகவே தேப்பெருமாள்நல்லூர் சிவன் கோவிலுக்கு வருவார் தக்ஷிணாமூர்த்தி ஸன்னிதிக்கு நிவேதனம் செய்வார் பின் தனது வீட்டில் உணவு உண்பார். சிலசமயம் நேரம் ஆகி சாதம் கெட்டுவிடக்கூடாது என்பதால் சிறிது நீர் சேர்த்து சாதத்தை எடுத்துவந்து தக்ஷிணாமூர்த்திக்கு ஸமர்பிப்பார். அதனைக் காணும் சிலர் பழைய சாதத்தினை சிவன் நிவேதனம் செய்வதாக எண்ணி “பழையசோற்று சிவன்” என அழைப்பதுண்டு. ருசியான பழத்தை ஸ்ரீ ராமனுக்கு ஸமர்பிக்க எண்ணிய ஸபரி சுவைத்துப்பார்த்துப் பழங்களைக் கொடுத்தாலும் அந்த எச்சில் பழத்தின் பின்னால் உள்ள பக்திக்காக ஸ்ரீ ராமன் ஏற்றான். அப்படிச் சிவனின் நீர் கலந்த அன்னத்தின் பின்னால் உள்ள பக்திக்காக தக்ஷிணாமூர்த்தி அந்த அன்னத்தை ஏற்றார் போலும். இருபத்தைந்தாவது வயதில் ஸிவகாமி என்னும் தர்மவதியை பெற்றோர்கள் ஏற்பாட்டில் மணந்த சிவனுக்கு உண்மையில் அவரது தர்ம வாழ்க்கைக்கு உதவும் ஸஹதர்மிணியாகவே இருந்தார்.

அன்னதானம்

தேப்பெருமாள்நல்லூர் பெருமாள் ஸன்னிதியில் சித்திரை மாதம் நடைபெற்றுவந்த வஸந்தோத்ஸவத்தின் போது ஸம்ப்ரதாய நாட்டிய நாடகங்கள் நடைபெறும்.  உலகப் புகழ் பெற்ற அந்த நாடகங்களைக் காணப் பல ஊர் மக்கள் வருவது வழக்கம். அவர்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் என்று தோன்ற ராமசாமி தனது பூர்வீக சொத்தை  விற்று ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி ஸமேத வரதராஜர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் ஸன்னிதி உத்ஸவத்தில் தனது முதல் அன்னதானத்தைத் துவங்கினார். பெருமாள் ஸன்னிதியில் ராமசாமி ஆரம்பித்த அன்னதானம் பின்னாளில் அவரை அன்னதான சிவனாகியது 50 வருடம் அவரது அன்னதானப் பணி தடையின்றி வளர்ந்து தமிழகத்தின் பல ஊர்களில் கோயில் திருவிழாக்களில் நடந்தது. சில பாத்திரங்களுடன் முதல் நாள் இரவு செல்வார் சிப்பந்திகள் வருவார்கள். முதல் நாள் மாலை வரை அன்னதானத்திற்கான எந்த அறிகுறியும் தெரியாத அந்த இடத்தில் மறுநாள் காலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் என்றால் யாருக்கும் வியப்புதான். சிவன் உபயோகித்த சமையல் பாத்திரங்கள் பல கும்பகோணம் ஸ்ரீ காஞ்சிமடத்தில் இருந்தது. சிவன் அவர்களின் வருடாந்திர அன்னதான நிகழ்ச்சிகள் - சித்திரை மாதம் நாகைப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி அமுது படையல் திருவிழா. வைகாசியில் தேப்பெருமாள் நல்லூர் வஸந்தோத்ஸவம், நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகேயுள்ள திருமாளகரம் திருவிழா.  ஆனி மாதம் காரைக்காலில் மாம்பழத்திருவிழா. ஆடி மாதம் சங்கமுகம், ஆடி அமாவாசை மயிலாடுதுறை அருகே பூம்புகாரில்.  ஐப்பசியில்    மாயூரம் (மயிலாடுதுறை) துலாஸ்நானம், கார்த்திகையில் திருநாகேஸ்வரம் கார்த்திகை சோமவாரத்திருவிழா, மார்கழியில் நாச்சியார் கோயில் தெப்பம், தை மாதம் எண்கண் புஷ்யம் திருவிழா, மாசியில் கும்பகோணம் மகம், திருவைகாவூர் சிவராத்திரி பங்குனியில்  எட்டுக்குடியில் உத்திரம். மற்றும் பல இடங்களில் நடந்த திருவிழாக்கள்... என அவர் சேவை தொடரும் ...

அட்சய பாத்திரமானார்

யாரிடமும் சிவன்  காசு பணம் என வாங்கமாட்டார், அன்னதானத்துக்கு “இந்த இடத்துக்கு இந்தப் பொருள்களை அனுப்பி வை” என உத்தரவிடுவார், அதே சமயம் அவரவர் தகுதி வசதி தெரிந்து வாங்குவார். ஒருமுறை இரண்டு மூட்டை அரிசி அனுப்பி வைத்தவரிடம் உன் குடும்பம் பெரியது ஒருமூட்டை போதும் என்றாராம். ஒருமுறை ஸமாராதனைக்கு ஊறுகாய்க்கு நெல்லிக்காய் பத்து வண்டியில் வந்ததாம். இரண்டு நாளில் தீர்ந்துவிட மேலும் பத்துவண்டியில் நெல்லிக்காய் வந்ததாம். விறகு நூறு வண்டி, உணவு பரிமாறப்பட்ட இடத்தை  உடனடியாகச் சுத்தம் செய்வது சிவனின் தூய்மையான குணத்துக்கு அடையாளம். சுத்தம் செய்யத் துடைப்பம் மட்டும் இரண்டு மாட்டுவண்டியில் வந்ததாம். திருச்சி திருவானைக்கா கோயில் தாடங்க பிரதிஷ்டையின் போது ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது என்றால் யோசித்துக்கொள்ளுங்கள். அவரின் மனதின் விசாலம் மற்றும் தூய்மை தன்னலம் பாராத தன்மை இவற்றினால் கவரப்பட்ட பல நூறு செல்வந்தர்கள் அவரின் வாக்குக்குக் கொடுத்த மரியாதை இன்றைக்கு நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத செயல். ஆம்! அது சிவன் ஸமாராதனை. பரிமாறப் பாத்திரங்களை அந்தந்த இடங்களில் வாங்கிப் பின் பணி முடிந்தவுடன் ஏலம் விட்டு அதன் மூலம் சிப்பந்திகளுக்குச் சம்பளம் கொடுத்து, உணவு மீதம் இல்லாமல் பார்த்துக்கொள்வதுடன் யாருக்கும் இல்லை என்று  சொல்லாது உணவளித்து, தயிர் ,நெய் மீதமானால் அவற்றைப் பீப்பாய்களில் நிரப்பி...  கெடாமல் இருக்க குளத்துக்குள் குளிர்ந்த நீரில் மூழ்க வைத்துப் ... பாதுகாத்துப் பின் பயன்படுத்திக்கொள்வது அவரின் சிக்கன நடவடிக்கை. உணவு தயாராகும் போதே அதில் ஏதும் குறை இருக்கிறதா என வாசனையின் மூலம் அறிந்து “டேய்! சாம்பாருக்கு இரண்டு முறம் மல்லி சேர்க்கணும், ஒரு முறம் உப்பு சேர்க்கணும்” என்று  சிவனிடமிருந்து உத்தரவு வரும். ஸமாராதனையில் உண்டவர்கள் எழுந்தவுடன் அவர்கள் உண்ட எச்சில் இலையின் மீது விழுந்து புரளுவது சிவனின் வழக்கம். கரூர் அருகே உள்ள நெரூரில் ஸதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை (நினைவு) தினத்தில் பலதரப்பட்ட மக்கள் உண்ட இலைகளின் மீது பிரார்த்தனை செய்துகொண்டவர்கள் உருள்வது இன்றும் நடைபெறுகிறது. எனவே சிவனின் இந்தச் செயல் அவர் மன அடக்கத்துக்கு செய்த செயல். சாதாரண மனிதர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட உயர்ந்த நிலையை அடையும் நிலை அதை புரிந்துகொள்ள எல்லாராலும் முடியாது. எல்லோருக்கும் உணவு அளித்துவிட்டுத் தான் மட்டும் யாரோ ஒரு அன்பரின் வீட்டிற்க்கு சென்று மோர்சாதம் சாப்பிடுவார், அப்படிச் செல்லும் வீடுகளில் பிராமணர் அல்லாதவர்கள் வீடும் உண்டு. வயது முதிர்ந்த பிறகு மாட்டு வண்டியில் பயணம், அதுவும் வண்டிக்காரனுக்குக் கட்டளை -  என்ன தெரியுமா? மாட்டை அடித்து விரட்டி ஓட்டுவதோ அல்லது தார் குச்சி போடுவதோ கூடாது என்பார். சில சமயம் மாட்டுவண்டியின் பின் தானே நடந்தும் செல்லுவார் அதிக தூரம் பயணித்ததால் மாட்டிற்கு துன்பம் கூடாது என எண்ணிய மஹாத்மாதான் சிவன். மனைவிக்கு உடல்நிலை சரியில்லை உடனே வரவும் என்று செய்தி , ஸமாராதனை முடிந்தவுடன் வருகிறேன் போகிற உயிரை பிடிக்கவாடா முடியும்? இத்தனை பேருக்கும் சாப்பாடு போடவேண்டாமா... ஸமாராதனை முடிந்து சிவன் சென்றபோது அவரது தொண்டிற்க்கு, கொள்கைக்கு, தியாகத்துக்கு உற்ற துணையாய் இருந்த அவரது தர்ம பத்னி ஸிவகாமி தீர்க்கசுமங்கலியாய்ப் பிரிந்திருந்தார். தன்னலம் பாராத சிவனுக்கு சுயநலம் பாராத ஸிவகாமி என்னே பொருத்தம்!!!! .    பலர் அறியாத செய்தி, சிவன் நன்றாக ஜோதிடம் பார்க்கக்கூடியவர். அவரிடம் ஜோதிடம் பார்த்து  அவர் கூறியபடியே நடந்து  பலனடைந்தவர்கள் பலர்.    1852 இல் பிறந்து தனது 87வது வயதில் 19/5/1939 இல் இறைவனடி சேர்ந்த கலியுக பீமன் அன்னதான சிவன் பற்றி அவரது நூற்றாண்டு விழாவின் போது... . “தேப்பெருமாள்நல்லூர் அன்னதானசிவன் .. உலகில் பிறக்கும்போது எப்படித் தனக்கு என்று உடமை ஏதுமின்றி பிறந்தாரோ அது போல வாழ்நாள் எல்லாம் வாழ்ந்திருந்தவர். மேலே ஆகாசம், கீழே பூமி, சுற்றிலும் காற்று, தண்ணீர், பறவைகள், மனிதர்கள், இடுப்பில் ஒரு கந்தல், தோளில் ஒரு சவுக்கம், வயதான பிறகு ஊன்றிக்கொள்ள கையில் ஒரு தடி, இவ்வளவுதான் அவருடய உடமைகள்! சில அபூர்வ மனிதர்களைப் போல முகவெட்டு “பெர்சனால்டி” என்று சொல்வதற்கும் அவரிடம் ஒன்றுமில்லை. ஆயினும் அந்த அதிசயமனிதர் தமது வாழ்நாளில் லட்ச லட்ச லட்ச மக்களுக்கு அறுசுவை உண்டி அளித்திருக்கிறார் என்றால் அந்த அற்புதத்தினை என்னவென்று சொல்வது. --  (கல்கி 25/5/1952) ஓயாத உழைப்பு... உழைப்பு... சரியாக நேரத்துக்கு வேண்டிய உணவு கூட உண்ணாத உழைப்பு... காலத்தின் கைகளில் ஸ்ரீ சிவன் உடல் தளர்ந்தது. “மாமா உங்களது அந்திம கைங்கர்யத்தினை நான் செய்ய அனுமதிக்கவேண்டும்”.. சகோதரியின் மகன் பிரார்த்திக்க... எனது ஈமக்கிரியைக்காக யாரிடமும் நீ கைநீட்டிப் பணம் வாங்கக்கூடாது உன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டே செய்யவேண்டும். அப்படி என்றால் அனுமதி தருகிறேன்... ஆஹா! என்ன ஒரு உயர்ந்த சிந்தனை. தன்னலம் சிறிதும் இல்லாது தான் செய்யும் அன்னதானத்துக்கு.க் கூட யாரிடமும் பல் இளித்து கேட்காது, தன் சுயமரியாதையையும் விட்டுக்கொடுக்காது, கருணை கூடிய அதிகாரத்தில் “இதை இதை அனுப்பி வை” என்று கட்டளையிட்டு அப்படி அவர் கேட்பதே தாங்கள் செய்யும் பாக்கியம் என மிட்டா மிராசுகள் செல்வந்தர்கள் தனவந்தர்களை நினைக்க வைத்தவர் அல்லவோ சிவன். சிவனின் காலத்துக்குப் பிறகும் பல தர்ம காரியங்கள் நடந்தன. அவருடன் பணியாற்றிய அந்தரங்க பக்தர் ஸ்ரீ ஏ.கிருஷ்ணஸ்வாமி ஐயரால் தேப்பெருமாள்நல்லூரில் அன்னதானசிவன் ஹரிஜன் எலிமெண்டரி பள்ளிக்கூடம் துவங்கினார் அதில் 110 ஹரிஜன மாணவர்கள் படித்தனர். இவர்களின் பகல் உணவுக்காக அறக்கூழ் சாலை அமைக்கப்பட்டது குடந்தையில் 28/5/53 இல் தாயற்ற அல்லது உணவு பெற முடியாத குழந்தைகளுக்கு  “அன்னதான சிவன் சிசு நலவிடுதி” ... தேப்பெருமாள் நல்லூரில் சிவன் இலவச வாசக சாலை.. அன்னதான சிவன் ஞாபகார்த்த சங்கம் 19/10/1952 இல் சிவன் நூற்றாண்டின் போது மழையின்மையால் ஏற்பட்ட பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட வடஆற்காடு மாவட்டம் வாலாஜா தாலுக்கா செங்காடு கிராமத்தில் ஸ்ரீ கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் உதவும் பணிகள் கி.வா.ஜ. போன்ற பிரபலங்கள் பலர் போற்றும் வகையில் துவக்கிவைக்கப்பட்டு நடந்தது.. தேப்பெருமாள் நல்லூரில் சிவனை நினைவுகூற ஒரு சிலையோ மணிமண்டபமோ இல்லை ... ஆனால் இன்று அவரது உறவினர் நடத்தும் அன்னதானசிவன் முதியோர் இல்லம் சிவனின் சிந்தனையை தாங்கி நிற்கிறது. தேப்பெருமாள் நல்லூர் சிவன் கோயில் ஸன்னிதியில் தட்சிணாமூர்த்தியைப் சேவிக்கும்போது நமக்கு அன்னதானசிவனின் ஞாபகம்தான் மேலோங்குகிறது. ஆம்! அன்னதான சிவன் என்னும் மகான் செய்த பணிகளை எண்ணும்போது அவர் உருவம் மனித மனங்களில் சிலையாக நிற்கிறது., அந்த மனங்களே அவருக்கு மணிமண்டபம். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி என்னும் மஹாகவி. பல லட்சம் தனிமனிதர்களுக்காக அவர்களது பசிப்பிணியைப் போக்கவே தன் வாழ்வை அற்பணித்தார் தேப்பெருமாள் நல்லூர் அன்னதானசிவன்... என்னும் ஏழை பிராமணன். சொன்னதானம் செய்திடினும் சேர்விலாது புகழோங்கும் என்னதானம் செய்திடினும் ஏழையெளியர் பசிதீரும் அன்னதானம் செய்வதுவே அரியபெரிய தானமதாம் அன்னதானம் செய்த சிவன் அன்பு வாழ்க வாழியவே

நன்றி

தேப்பெருமாள் நல்லூர் பெருமாள் கோவில் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட அக்ரஹாரம் நரசிம்மன் U அவர்களுக்கு எங்கள் பணிவான நன்றிகள் அவர் கோவிலை பற்றியும் நரசிம்ம ஜெயந்தி பற்றியும் கல்வெட்டுக்கள் தஞ்சை மகாலில் உள்ள பல நூல்கள் மற்றும் பல சரித்திர ஆசிரியர்கள் சந்தித்து பெற்ற விஷயங்கள் ஏராளம். மேலும் நமது ஊரின் பல பெரியவர்கள் நரசிம்ம ஜெயந்தி பற்றி பல விஷயங்கள் சொன்னார்கள், அவர்கள் பெயரை எழுதினால் பட்டியல் நீளும் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்

Videos · காணொளிகள்